திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை: பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது


திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை: பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 3 Oct 2018 10:54 PM GMT (Updated: 3 Oct 2018 10:54 PM GMT)

திருப்பூரில் நேற்று மாலை மழை கொட்டித்தீர்த்ததால் சிட்கோ வளாகத்தில் உள்ள பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலை 4 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 4.30 மணி அளவில் மழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றதை காண முடிந்தது. பள்ளி முடிந்து மாணவ-மாணவிகள் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலத்தின் அடியில் மழைநீர் அதிக அளவில் சென்றது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. மழைநீர் வடிந்த பிறகு அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

இதுபோல் ஈஸ்வரன் கோவில் வீதி செல்லும் நொய்யல் ஆற்று பாலத்தின் மேல் மழைநீர் அதிக அளவில் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகரில் 1 மணி நேரமாக கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நொய்யல் ஆற்றிலும் வெள்ளம் அதிக அளவில் சென்றது.

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் மழைநீர் அதிக அளவு தேங்கியது. அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களை வெள்ளம் சூழ்ந்தது. 2 நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீரை அங்கிருந்த ஊழியர்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினார்கள்.

இதுபோல் அருகில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு முன்பு தேங்கிய மழைநீரை மின்மோட்டார் வைத்து உடனடியாக உறிஞ்சி வெளியேற்றினார்கள்.

மழை காரணமாக திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.


Next Story