வியாபாரியிடம் ரூ.44¾ லட்சம் நகைகள் கொள்ளையடித்த 4 பேர் பிடிபட்டனர்


வியாபாரியிடம் ரூ.44¾ லட்சம் நகைகள் கொள்ளையடித்த 4 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:05 PM GMT (Updated: 3 Oct 2018 11:05 PM GMT)

எக்ஸ்பிரஸ் ரெயிலில் வியாபாரியிடம் இருந்து ரூ.44¾ லட்சம் நகைகள் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

குஜராத் மாநிலம் பாவ்நகரில் இருந்து காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குந்தன்புக்ராஜ் என்ற வியாபாரி கடந்த மாதம் 29-ந் தேதி பயணம் செய்தார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.44 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் அடங்கிய பையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக அவர் வசாய்ரோடு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வசாய்ரோடு ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் குந்தன்புக்ராஜ் பயணம் செய்த பெட்டியில் இருந்து 4 பேர் அவரது நகைகள் அடங்கிய பையுடன் இறங்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அதன் மூலம் போலீசார் கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த கொள்ளை கும்பலில், வசாய் மேற்கு பாப்டி பகுதியை சேர்ந்த தோகில் கான் (வயது23) என்பவர் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் விராரை சேர்ந்த ஹாரிஸ் தேவ்ராஜ் (35), நாய்காவை சேர்ந்த முகமது ரபீக் (32) குந்தன்நகரை சேர்ந்த உசேன் இலியாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குந்தன்புக்ராஜின் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story