காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்


காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:46 AM IST (Updated: 4 Oct 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோகனூர், 


மோகனூர் கிழக்கு ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மோகனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். மோகனூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் முத்துசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் நவவடி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் அர்ஜுனன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பகவதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசும் போது, வரும் தேர்தலில் கழக பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி தெளிவாக எடுத்து கூறினார். முன்னதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது,

தொடர்ந்து கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது பற்றிய விவரம் வருமாறு:-

காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து மோகனூர் வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி அதிகமான மக்கள் இந்த பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோகனூர் - வாங்கல் தரைவழி பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள மின்விளக்குகளை உடனடியாக எரிய வைக்க வேண்டும். மோகனூர் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. அதை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்.

மோகனூர் சர்க்கரை ஆலையில் அமைக்கப்பட்டுள்ள இணை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மோகனூர் பேரூர் தி.மு.க.விற்கு கட்சி அலுவலகம் கட்ட தலைமை கழகத்திடம் அனுமதி கோருதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் சுகுமார், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், மற்றும் திருமுருகன், குமரவேல், வரதராஜன், ராஜாகண்ணன் உள்பட மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், சார்புமன்ற பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மோகனூர் பேரூர் கழக தி.மு.க. செயலாளர் செல்லவேல் நன்றி கூறினார். 

Next Story