புயல் எச்சரிக்கை: அவசரமாக கரை திரும்பிய குளச்சல் விசைப்படகு மீனவர்கள்


புயல் எச்சரிக்கை: அவசரமாக கரை திரும்பிய குளச்சல் விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 5 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 8:16 PM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீன்பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர்.

குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் ஆழ்கடலில் சுமார் 10 முதல் 12 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கம். இவ்வாறு ஆழ்கடலுக்கு சென்று கரை திரும்பும் படகுகளில் கணவாய், கிளிமீன், நவரை, நாக்கண்டம் உள்பட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சலை தங்குதளமாக கொண்டுள்ள ஏராளமான விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன.

இந்தநிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 8–ந் தேதி வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று  வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

புயல் எச்சரிக்கை குறித்து குளச்சலை தங்குதளமாக கொண்டு ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் தகவலை தெரிவித்தனர். இதேபோல் விசைப்படகு சங்கத்தில் இருந்தும் மீனவர்களுக்கு, உடனே கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை 30 விசைப்படகுகள் அவசரமாக கரை திரும்பின. ஏற்கனவே கரை திரும்பிய 100–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகமான மீன்கள் கிடைக்கவில்லை. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் குறைந்த அளவு மீன்களுடன்  மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினார்கள்.

Next Story