தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 2018-10-04T22:48:30+05:30)

தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்,


தஞ்சை மேம்பாலம் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் தலைமை தாங்கினார்.

இதில் 25–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விளைந்த நெற்பயிர்களுடனும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை தரையில் கொட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


பின்னர் சுந்தரவிமலநாதன் கூறுகையில், குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதன்படி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டும், கொள்முதல் செய்யப்படவில்லை. காரணம் கேட்டால் சாக்கு தட்டுப்பாடு என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள்.

எவ்வளவு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து அங்கு மழையில் நனைகிறது. இதனால் நெல் முளைக்கும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல் நனைந்து ஈரப்பதமும் அதிகமாக உள்ளது. எனவே ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.


நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு நெல் கொள்முதலை ஊக்குவிக்கவில்லை. அதற்கு ஏற்றால்போல் தமிழக அரசும் செயல்படுகிறது. பெயரளவுக்குத்தான் திறந்து வைத்துள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து சாக்கு இல்லை என்று சாக்கு போக்கு கூறாமல் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

Next Story