பாட்டியின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரன் திடீர் சாவு
மெஞ்ஞானபுரம் அருகே பாட்டியின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரன் திடீரென்று உயிரிழந்தார்.
மெஞ்ஞானபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே மானாடு தண்டுபத்து பஞ்சாயத்து வீரபாகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகுட்டி. இவருடைய மகன் ஞானமூர்த்தி (வயது 25). இவர் நாகர்கோவிலில் தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தார். முத்துகுட்டியின் தாயார் கடந்த 1-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். எனவே தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ஞானமூர்த்தி சொந்த ஊருக்கு வந்தார்.
பாட்டியின் இறுதிச்சடங்கு நடந்த பின்னர், 2-ந்தேதி இரவு வீட்டில் ஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஞானமூர்த்தி திடீரென்று மயங்கி விழுந்தார். அவரது வாயிலும், மூக்கிலும் ரத்தம் கசிந்தது.
உடனே அவரை குடும்பத்தினர் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பாட்டியின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரன் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story