கோமுகி அணை நீர்மட்டம் 28 அடியாக உயர்வு


கோமுகி அணை நீர்மட்டம் 28 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 5 Oct 2018 3:30 AM IST (Updated: 4 Oct 2018 11:38 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் 28 அடியாக உயர்ந்துள்ளது.

கச்சிராயப்பாளையம்,


விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர், பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வந்து சேரும்.

கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

போதிய மழை இல்லாததன் காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் லட்ச தீவுப்பகுதியில் வளி மண்டலத்தில் சுழற்சி நிலவுவதாலும், தென் கிழக்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி உள்ளதாலும் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் 20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று படிப்படியாக உயர்ந்து 28 அடியை எட்டியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கல்வராயன்மலை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அப்பகுதி விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரியார், மேகம் ஆகிய நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் விழுகிறது. 

Next Story