நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 4 Oct 2018 9:45 PM GMT (Updated: 4 Oct 2018 7:03 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, இந்திராநகர், காந்திகிராமம் உள்ளிட்ட வருசநாடு மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வைகை ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக வருசநாடு அருகே வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வைகை அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும், நீர்வரத்து குறைந்த காரணத்தினாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில் தொடர் மழையால் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 57.87 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 415 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,190 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 3 ஆயிரத்து 206 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது. தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு- 30, தேக்கடி-31, பெரியகுளம்-5, உத்தமபாளையம்-6.6, போடி-11.4, வீரபாண்டி-15, கூடலூர்-13, சண்முகாநதி-9, ஆண்டிப்பட்டி-12, மஞ்சளாறு அணை-18, சோத்துப்பாறை அணை-7, வைகை அணை-3. 

Next Story