கோயம்பேட்டில் பெண் டாக்டரிடம் ரகளை செய்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


கோயம்பேட்டில் பெண் டாக்டரிடம் ரகளை செய்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2018 3:45 AM IST (Updated: 5 Oct 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில், பெண் டாக்டரிடம் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா அசன்(வயது 48). டாக்டரான இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கோயம்பேடு நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியாக மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.

இதன் அருகே உள்ள வீட்டில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை போலீஸ் காரர் இளங்கோவன், இந்த மருத்துவமனை அருகே குடிபோதையில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியே வந்த விஜயசாந்தி என்ற பெண்ணிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்கு சென்று போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வெளியே வந்த அவர், போலீசிடமே தகராறு செய்கிறாயா? என்று கேட்டு அந்த பெண்ணிடம் மேலும் வாக்குவாதம் செய்தார்.

இதனை டாக்டர் பாத்திமா அசன் தட்டிக்கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி, ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் டாக்டர் பாத்திமா அசன் புகார் செய்தார்.

கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அதிகாரிகளிடம் அளித்தனர்.

அதில் போலீஸ்காரர் இளங்கோவன், குடிபோதையில் பெண் டாக்டரிடம் ரகளையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக போலீஸ்காரர் இளங்கோவனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story