தஞ்சை மாவட்டத்தில் 102 மி.மீ. மழை கொட்டியது வடிகால்களில் அடைப்பால் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது


தஞ்சை மாவட்டத்தில் 102 மி.மீ. மழை கொட்டியது வடிகால்களில் அடைப்பால் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 4 Oct 2018 10:45 PM GMT (Updated: 4 Oct 2018 7:24 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பூதலுரில் 102 மி.மீ. மழை கொட்டியது. வடிகால்களில் அடைப்பு காரணமாக வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து பொக்லின் எந்திரம் மூலம் அடைப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் லேசான தூறலுடன் மழை பெய்தது. பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. நேற்று காலை முதல் மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிராம்பட்டினம், திருவையாறு, கும்பகோணம், கல்லணை, அய்யம்பேட்டை, மஞ்சளாறு, பூதலூர், மதுக்கூர், அணைக்கரை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சில தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக பூதலூரில் 102 மி.மீ மழை கொட்டியது. மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது.

இந்த மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை அடுத்த ஆலக்குடி பகுதியில் மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கி செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் நெல் சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லின் எந்திரம் உதவியுடன் மழை நீர் வடிகாலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அடைப்புகள் எடுக்கப்பட்டதுடன், செடி, கொடிகளும் அகற்றப்பட்டன. இதையடுத்து தண்ணீர் தங்குதடையின்றி சென்றது. இதே போல் ஆலக்குடியில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனை அகற்ற, ரெயில்வே துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியத்துக்குப்பிறகு மழை இன்றி வெறிச்சோடியது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 48, கும்பகோணம் 43, பாபநாசம் 31, தஞ்சாவூர் 20, திருவையாறு 44, திருக்காட்டுப்பள்ளி 72, வல்லம் 25, கல்லணை 50, அய்யம்பேட்டை 46, திருவிடைமருதூர் 46, மஞ்சளாறு 66, நெய்வாசல் தென்பாதி 31, பூதலூர் 102, வெட்டிக்காடு 24, ஈச்சன்விடுதி 18, ஒரத்தநாடு 28, மதுக்கூர் 62, பட்டுக்கோட்டை 41, பேராவூரணி 13, அணைக் கரை 57, குருங்குளம் 24.

Next Story