திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை மரம் விழுந்து பஸ் கண்ணாடி நொறுங்கியது


திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை மரம் விழுந்து பஸ் கண்ணாடி நொறுங்கியது
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 7:38 PM GMT)

திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மரம் விழுந்ததில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகலுக்கு பின்னர் திருச்சி மாவட்டத்தில் பரவலாக விட்டு, விட்டு மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை முதல் இடைவிடாது தொடர் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு சென்றவர்கள் அவதி அடைந்தனர். மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடைபிடித்தபடி பஸ்சுக்காக காத்திருந்தனர். மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திருச்சி-கரூர் சாலையில் முத்தரசநல்லூர் அருகே சாலையோரம் இருந்த பழமையான மரம் நேற்று காலை வேரோடு சாய்ந்தது. அந்தசமயம் ஜீயபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மரம் சாய்ந்து விழுவதை கண்ட பஸ் டிரைவர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். ஆனாலும் மரத்தின் கிளை பஸ்சின் முன்பகுதியில் விழுந்தது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மரம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

தொடர் மழை காரணமாக புத்தூர் ஆறுகண் பாலம் அருகில் உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது. திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

லால்குடி- 37.20, மணப்பாறை- 7.40, முசிறி- 8.00, புள்ளம்பாடி- 110.60, துறையூர்- 31.00, விமானநிலையம்- 19.40, திருச்சி டவுன்- 17.30, மருங்காபுரி- 10.20, பொன்னையாறு அணை- 9.00, நவலூர்குட்டப்பட்டு- 28.20, நந்தியாறுதலை- 98.60, கல்லக்குடி- 50.20, வாத்தலை அணைக்கட்டு- 13.20, சமயபுரம்- 40.00, தேவிமங்கலம்- 21.00, சிறுகுடி- 6.00, புலிவலம்- 3.00, குப்பம்பட்டி- 27.00, கோவில்பட்டி- 10.40, தென்பரநாடு- 17.00, பொன்மலை- 21.80, திருச்சி ஜங்ஷன்- 14.60, துவாக்குடி- 48.40.

திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 25.98 மில்லி மீட்டரும், ஒட்டுமொத்தமாக 649.50 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Next Story