கிணற்றில் விழுந்து விடிய, விடிய தவித்த விவசாயி
உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி விடிய, விடிய தவித்தார். மறுநாள் காலை தீயணைப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அம்பட்டையம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னக்காளை(வயது 58). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள கிணற்றின் அருகில் சென்றபோது அவர் கால் தவறி உள்ளே விழுந்துவிட்டார். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் இரவு நேரம் என்பதால் தோட்டத்தில் யாரும் இல்லை. கிணற்றினுள் கூக்குரல் போட்டும் அவரது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் விடிய, விடிய தண்ணீருக்குள் மூழ்கிவிடாமல் இருக்க கிணற்றின் பக்கவாட்டு சுவரை பிடித்துக்கொண்டே தத்தளித்துள்ளார்.
இந்தநிலையில் தோட்டத்திற்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால் நேற்று காலை அவரது மனைவி காத்தம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் விழுந்து சின்னக்காளை தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து கணவரை மீட்க போராடினார். மேலும் இதுதொடர்பாக உசிலம்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றினுள் 8 மணிநேரமாக தவித்த சின்னக்காளையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார்.
Related Tags :
Next Story