ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, தேவகோட்டை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை,
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் இளங்கோ, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தேவகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழகப்பன், ஜோசப்இன்னோசென்ட் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிசயராஜ், வடிவேல், ராஜ்குமார், தேவராஜ், அங்கன்வாடி ஊழியர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சிங்கம்புணரியில் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், சேவுகமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தமாதம் 27-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். முடிவில் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் மகாலிங்கஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர் சங்க வட்ட பொருளாளர் லெட்சுமி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் ஜாக்டோ-ஜியோ வட்டார தொடர்பாளர் முத்துமாரியப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story