அரசு கல்லூரியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


அரசு கல்லூரியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2018 3:30 AM IST (Updated: 5 Oct 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம், 


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சுபலட்சுமி (வயது 19). இவர் சி.முட்லூர் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல கல்லூரி சென்றார். இந்த நிலையில் மதியம் 3 மணிக்கு இடைவேளை நேரத்தில் சுபலட்சுமி, கழிப்பறை சென்றுவருவதாக தன்னுடன் படிக்கும் தோழிகளுடன் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வகுப்பறைக்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த மாணவிகள், அவரை தேடினர். அப்போது அவர் கழிப்பறையில் இல்லை. இதனால் பயந்துபோன மாணவ-மாணவிகள் சுபலட்சுமியை கல்லூரி முழுவதும் தேடினர். அப்போது கல்லூரியின் 2-வது மாடியில் கணிதத்துறை அருகே யாரும் இல்லாத ஒரு வகுப்பறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த மாணவிகள் சத்தம்போட்டனர். பின்னர் மாணவர்கள் அங்கு ஓடி வந்து, தூக்கில் தொங்கிய சுபலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து உடனடியாக மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். காலநேரத்தை வீணடிக்க கூடாது என்று கருதிய மாணவர்கள், சுபலட்சுமியை மோட்டார் சைக்கிளிலேயே சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே சுபலட்சுமி இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சுபலட்சுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. சுபலட்சுமியின் சாவு குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர்கள் சுபலட்சுமியின் உடலை வாங்க மறுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story