மர்ம சாவில் திடீர் திருப்பம்: ஏரியில் மூழ்கடித்து ச.ம.க. பிரமுகர் கொலை


மர்ம சாவில் திடீர் திருப்பம்: ஏரியில் மூழ்கடித்து ச.ம.க. பிரமுகர் கொலை
x
தினத்தந்தி 4 Oct 2018 10:00 PM GMT (Updated: 4 Oct 2018 9:10 PM GMT)

தாரமங்கலம் அருகே ஏரியில் பிணமாக மிதந்த சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் ஏரியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. அவரை கொலை செய்த 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

தாரமங்கலம், 


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள கொழந்தாம்பட்டி ஏரியில் கடந்த 2-ந் தேதி ஒரு வாலிபர் பிணம் மிதந்தது. இது குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பேரில் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம சாவு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் தாரமங்கலத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் அய்யம்மாள், ஏரியில் இறந்து கிடந்தது எனது மகன் சிவா (வயது 26) என்றும், மேலும் அவனது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 1-ந் தேதி எனது மகன் சிவா, அவனுடைய நண்பர்களான பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த சீரங்கன் மகன் மணி (25) என்பவரும், அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் மகன் சரவணன் (25) என்பவரும், தாரமங்கலம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தனர். அப்போது எனது மகன் சிவா அவசரமாக எனக்கு செலவுக்கு ரூ.ஆயிரம் வேண்டும் என்று கூறி என்னிடம் பணம் வாங்கி சென்றான். அதன் பிறகு தான் அவன் ஏரியில் பிணமாக மிதந்தான். எனவே எனது மகனின் சாவுக்கும் மணி, சரவணன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இதன் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் பேரில் மணி மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் தாரமங்கலம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:- நாங்கள் 3 பேரும் நண்பர்கள். தினமும் மாலை நேரத்தில் நாங்கள் மது குடிப்பது வழக்கம். அதேபோல கடந்த 1-ந் தேதி நாங்கள் 3 பேரும் தாரமங்கலத்தில் ஒரு மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு சென்று கொழந்தாம்பட்டி ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்தோம்.

அப்போது சிவா மீண்டும் மது வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு, தாரமங்கலம் சென்று, மதுபாட்டில்களை வாங்கி வந்தார். பின்னர் 3 பேரும் மீண்டும் மது குடித்தோம். அப்போது மதுபோதை அதிகமானதில் எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றிய நிலையில் சிவா திடீரென மதுபாட்டிலை உடைத்து எங்களை குத்த முயன்றார். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் எங்களை காப்பாற்றிக்கொள்ள நாங்கள் இருவரும் சேர்ந்து ஏரியில் மூழ்கடித்து சிவாவை கொலை செய்து விட்டு பின்னர் அங்கிருந்து சென்று விட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணி, சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, ஓமலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட சிவாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் சமத்துவ மக்கள் கட்சியின் தாரமங்கலம் ஒன்றிய பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். இதேபோல கைதான மணி சென்ட்ரிங் தொழிலாளி ஆவார். அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சரவணன் நெசவுத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது.

ஏரியில் பிணமாக மிதந்த சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டதோடு, அவரை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்ததாக, அவருடைய நண்பர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story