பழனியில் கொட்டித்தீர்த்த மழை: முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
பழனியில் கொட்டித்தீர்த்த மழையினால் முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பழனி,
பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பழனி நகரில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரை பீய்ச்சியடித்தப்படி வாகனங்கள் சாலையில் சென்றன.
இதேபோல் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. பழனி பஸ்நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பலத்த மழை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மலைக்கோவில் படிப்பாதையில் அருவிபோல தண்ணீர் வழிந்தோடியது.
இதற்கிடையே பலத்த மழை காரணமாக, காலை முதல் முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மழை குறைந்தபிறகு, மதியம் 2.30 மணிக்கு மேல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியது. பக்தர்கள் ரோப்காரில் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தற்போது பெய்த மழையினால் பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் 33.79 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 174 கன அடி நீர்வரத்து உள்ளது.
இதேபோல் 66 அடி உயரம் உடைய வரதமாநதி அணையில் 62.34 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் 42.40 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 34 கன அடி நீர்வரத்து உள்ளது.
செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. நேற்று காலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். தொடர்மழை எதிரொலியாக நத்தம் பகுதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான வானிலை நிலவுகிறது.
Related Tags :
Next Story