இலவச வீட்டு மனை வழங்க கோரி கொட்டும் மழையில் நரிக்குறவர்கள் சாலை மறியல்


இலவச வீட்டு மனை வழங்க கோரி கொட்டும் மழையில் நரிக்குறவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Oct 2018 5:16 AM IST (Updated: 5 Oct 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி நரிக்குறவர்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருபுவனை,

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டில் செவ்வாய்க் கிழமை தோறும் சந்தை நடைபெறும் இடத்தில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்து நரிக்குறவர்கள் வசித்து வந்தனர். இவர்களில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. மீதம் உள்ள 30 குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கு நீண்ட நாட்களாக இலவச மனை வழங்கப்படவில்லை.

இவர்களும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இலவச வீட்டுமனை அளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் சந்தைத்தோப்பு பகுதியில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும்போது வியாபாரிகளுக்கும், இவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது மழை பெய்வதால் அங்கு கூடாரம் அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் நேற்று காலை மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நரிக்குறவர்கள் திரண்டனர். புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு சென்று நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த பகுதியில் வழக்கம் போல் போக்குவரத்து சீரானது.


Next Story