காங்கிரஸ் மந்திரிகளுடன் டி.கே.சிவக்குமார் திடீர் ஆலோசனை


காங்கிரஸ் மந்திரிகளுடன் டி.கே.சிவக்குமார் திடீர் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Oct 2018 5:53 AM IST (Updated: 5 Oct 2018 5:53 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையாவுக்கு கட்சியில் அதிகரித்து வரும் செல்வாக்கை தடுக்க காங்கிரஸ் மந்திரிகளுடன் டி.கே.சிவக்குமார் திடீரென்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் மந்திரி டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் பெங்களூருவில் தனது வீட்டில் காங்கிரஸ் மந்திரிகளுடன், மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, யு.டி.காதர், வெங்கடரமணப்பா உள்பட மந்திரிகள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் மேலிடத்தில் சித்தராமையாவுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை தடுக்கும் நோக்கத்தில் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகத்தில் மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இதை தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் ராஜசேகர் பட்டீல் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டம் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபையில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சித்தராமையாவை ஒதுக்கிவிட்டு நாங்கள் கூட்டம் நடத்துவதாக கூறுவது தவறு. அவரது வீட்டில் இதுபற்றி நாங்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தினோம். துணை முதல்-மந்திரி வீட்டிலும் நாங்கள் விவாதித்தோம். அடுத்து வரும் நாட்களில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே வீட்டில் ஆலோசனை நடத்துவோம்.

இது மந்திரிகள் கூட்டம். அதனால் சித்தராமையா உள்பட தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்த பிறகே இந்த கூட்டத்ைத நடத்தி இருக்கிறோம். ராமநகர், ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.

எங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது தான் எங்களின் நோக்கம் ஆகும். மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்படும் என்று கூறுவது தவறான தகவல். அமலாக்கத்துறையில் இருந்து எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. நேரம் வரும்போது இதுபற்றி விரிவாக பேசுவேன்.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

மந்திரிகளுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாற்றம்

காங்கிரஸ் மந்திரிகளுடன் மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அதில் காங்கிரசை சேர்ந்த மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது மந்திரிகளுக்கு வெள்ளித்தட்டில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. மேலும் அவர்களுக்கு ெவள்ளி டம்ளரில் குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story