குப்பை தொட்டியில் உருவான நூலகம்


குப்பை தொட்டியில் உருவான நூலகம்
x
தினத்தந்தி 5 Oct 2018 12:58 PM IST (Updated: 5 Oct 2018 12:58 PM IST)
t-max-icont-min-icon

துருக்கியின் கன்கயா பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நூலகம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது!

மிகப் பெரிய, அழகான இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் படித்துவிட்டு, குப்பைகளில் தூக்கி எறிந்தவை. துப்புரவுத் தொழிலாளர்கள் மாதக் கணக்கில் வேலை செய்து, குப்பைகளில் இருந்து இந்தப் புத்தகங்களை எடுத்திருக் கிறார்கள். முதலில் தங்கள் குடும் பங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒரு வீட்டில் சிறிய அளவில் நூலகத்தை ஆரம்பித்தனர். நாளுக்கு நாள் புத்தகங்கள் சேர ஆரம்பித்தன. புத்தகங்களின் வகைகளும் பெருகின. ஒரு கட்டத்தில் இந்த நூலகம் பற்றிய தகவல் பலர் மூலம் வெளியே பரவியது.

அதைக் கேள்விப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை இங்கே கொண்டு வந்து அன்பளிப்பாகக் கொடுக்க ஆரம்பித்தனர். புத்தகங்கள் பெருக ஆரம்பித்ததும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. துப்புரவுத் துறை அதிகாரிகள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்தனர்.

“அதிகாரிகள் மேயரிடம் சென்று யோசனை கேட்டார்கள். ஒரு காலியான செங்கல் தொழிற்சாலையை நூலகத்துக்காக அவர் ஒதுக்கித் தந்தார். இடத்தைச் சுத்தம் செய்து, அலமாரிகளை உருவாக்கினோம். 3 ஆயிரம் புத்தகங்களை அடுக்கினோம். அந்தப் பெரிய கட்டிடத்தில் புத்தகங்கள் குறைவாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வெகு விரைவில் 6 ஆயிரம் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன.

உடனே எங்கள் துறை, இதைப் பொதுமக்கள் நூலகமாக மாற்ற முடிவெடுத்தது. கடந்த செப்டம்பர் முதல் பொதுமக்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு மொழி நூல்கள் இங்கே உள்ளன. இலக்கியம், வாழ்க்கை, வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலை என்று பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்குத் தனியாகக் கதைகள், படக் கதைகள், அறிவியல் புனை கதைகள் என்று ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சியாளர் களுக்குக்கூட இங்கே புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு முழு நேர நூலகரை நியமித்துவிட்டோம். தினமும் புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இங்கிருந்து உள்ளூர்ப் பள்ளிகள், சிறைச் சாலைகள் போன்ற இடங்களுக்கும் புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். இங்கேயே அமர்ந்து படிக்கும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் நகராட்சி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் சிமா கேஸ்கயா.

Next Story