சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்


சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:15 AM IST (Updated: 6 Oct 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமைதாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம், மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம் வழியாக நேரு கலையரங்கத்தில் முடிவடைந்தது. மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, கோவிந்தன், ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், துணை தாசில்தார் (தேர்தல்) ஆர்.செந்தில்குமார், சுகாதார அலுவலர்கள் எஸ்.மணிகண்டன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 41 ஆயிரத்து 585 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 29 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் அதிகளவில் உள்ளது என்றார்.

Next Story