வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கூட்டம்


வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கூட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகருடன் மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை கண்காணிக்கவும், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வட்டார அளவில் பலதுறை அலுவலர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களை உடனடியாக தணிக்கை செய்யவும், நிவாரண முகாம்களுக்கு செல்லும் வழிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகள் மற்றும் ஏரிகளில் நீர் அளவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உபரி நீர் திறந்து விடும்போது நீர் செல்லும் கீழ் நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உரிய எச்சரிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையினால் வெள்ள பாதிப்புகள் நிகழாமல் இருக்கவும், பருவமழையினால் பேரிடர் நிகழ்வுகள் ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைப் பணிகளை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து துறை சார்ந்த அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் வார்டு அளவில் செயல்படும் முதல் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு மற்றும் பேரிடர் தொடர்பான தகவலை அந்த பகுதியின் தாசில்தார் , வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களது புகார்களை கலெக்டர் அலவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

மேலும் புகார்கள் குறித்து தெளிவான விவரங்களுடன் 63697 00230 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகார்களை அனுப்பி வைக்கலாம். இவை தவிர கூடுதலாக 04343-234444 என்ற தொலைபேசி எண்ணுக்கும் உடனடியாக தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story