வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு: குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு: குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 Oct 2018 11:00 PM GMT (Updated: 5 Oct 2018 8:14 PM GMT)

ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில்,

வானிலை மையம், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும், அது புயலாக மாறி ஓமன் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 7-ந் தேதி மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கரை திரும்பி வருகின்றனர். கேரளா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், லட்சத்தீவு பகுதியில் இருந்தும் மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்து கரை திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம்.

ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு கடலோர காவல்படை, சென்னை, மும்பை, கொச்சி ஆகிய இடங்களில் உள்ள கடலோர காவல்படை மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் குறித்த தகவல்களை பரிமாறுவதற்கு குமரி மாவட்ட சிறப்பு அலுவலராக ஜாணி டாம் வர்க்கீஸ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வள்ளவிளை, சின்னத்துறை பகுதியில் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் மீன்வளத்துறை மூலமாக மீன்வளத்துறை இணை இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டு அங்கிருந்து அவர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது வரை கரை திரும்பாத மீனவர்கள் விவரம் வீடு வீடாக சென்று சேகரிக்கும் பணி வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 4-ந் தேதி (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் 78 தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 9 மண்டல அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக கடந்த 3-ந் தேதி அன்று அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் 760 உள்ளூர் கிராம மக்களும் இக்குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அனைத்து தொடர்புடைய துறைகள் சார்ந்த அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.

மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு, அனைத்து மீனவர்களும் கரைதிரும்ப அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டும். நம்பிக்கையோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 7-ந் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று “ரெட் அலர்ட்“ கொடுத்திருப்பதால் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் இருக்கிறோம். கனமழைக்காக 9 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

வானிலை எச்சரிக்கை மற்றும் ஆழ்கடல் விசைபடகுகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள குமரி மாவட்டத்தில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் 04651- 228696 ஆகும். ஆழ்கடலுக்கு அதிக அளவில் மீன்பிடிக்கச் செல்லும் சின்னத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 9597550066 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் வள்ளவிளையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 9489210152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வானிலை எச்சரிக்கை மைய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கவும், மேலும் இது குறித்து தகவல்களை பெறவும் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077 என்ற தொலைபேசி எண், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04652-227460 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். கனமழை எச்சரிக்கை தொடர்பாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கனமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.


Next Story