சொட்டுநீர் பாசனம் பற்றி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


சொட்டுநீர் பாசனம் பற்றி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2018 11:15 PM GMT (Updated: 5 Oct 2018 9:38 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் பற்றி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக சொட்டுநீர் பாசனம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி திருப்பூரில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்துகொண்டு சொட்டுநீர் பாசனம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை பயின்று பயன்பெறலாம். மேலும், இந்த பயிற்சியில் சொட்டுநீர் பாசன அமைப்பினை தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான தொழில்நுட்பங்களும் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெற்றவர்கள் சொட்டுநீர் பாசன நிறுவனங்கள், விவசாயிகள் ஆர்வலர் குழு மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்களில் பணிகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இதில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள் முதல் தொழிற்பயிற்சி முடித்தவர்கள், தோட்டக்கலை, வேளாண்மை பட்டயம், சிவில் மற்றும் எந்திரவியல் பட்டயபடிப்பு படித்தவர்கள், 16 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு வாரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் http://tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, வேளாண்மை வளாகம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story