மாவட்டத்தில் 3–வது நாளாக தொடர் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


மாவட்டத்தில் 3–வது நாளாக தொடர் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2018 3:45 AM IST (Updated: 6 Oct 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 3–வது நாளாக தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்,

தென்மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இதனிடையே இலங்கை அருகே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3–ந் தேதி மாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில் நேற்றும் 3–வது நாளாக இந்த மழை நீடித்தது.

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது இடி– மின்னலுடன் கூடிய கனமழையாகவும் கொட்டி தீர்த்தது.

நேற்று காலை 6 மணிக்கு மேல் மழை சற்று ஓய்ந்தது. இருந்தபோதிலும் வானம் மப்பும், மந்தாரமுமாகவே காட்சியளித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி– கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ– மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

இந்நிலையில் காலை 9 மணியளவில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் காலை 10.30 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி–மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை இடைவிடாமல் 1½ மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதன் பிறகும் பகல் 12 மணியில் இருந்து தொடர்ந்து சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

பலத்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகரில் உள்ள நேருஜி சாலை, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, பழைய கோர்ட்டு சாலை, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மழைநீரில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக ஆசிரியர் நகர், வி.ஜி.பி.நகர், பாண்டியன் நகர், சுதாகர் நகர், கம்பன் நகர், கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம், கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

விக்கிரவாண்டி– கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருவதால் அந்த பணிக்காக சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அவ்வாறு விழுப்புரம் அருகே வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, சுந்தரிப்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம், மேல்மலையனூர், திருக்கோவிலூர், மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. அதுபோல் வீடூர், கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகளின் நீர்மட்டமும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

மரக்காணம்– 79

வானூர்– 76.50

திண்டிவனம்– 71

செஞ்சி– 60

விழுப்புரம்– 43.50

உளுந்தூர்பேட்டை– 37

சங்கராபுரம்– 29

கள்ளக்குறிச்சி– 27

திருக்கோவிலூர்– 17

மொத்தம்– 440

சராசரி– 48.89


Related Tags :
Next Story