நீர்நிலைகளை பாதுகாக்கக்கோரி வழக்கு: மதுரை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
நீர்நிலைகளை பாதுகாக்கக்கோரிய வழக்கில் வருகிற 11–ந்தேதி மதுரை கலெக்டர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை வண்டியூர் கண்மாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதிகாரிகள் துணையுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால், தண்ணீர் நிலத்தின் அடியில் செல்லாமல் நீரோட்டம் தடைபடுகிறது. இதேபோல் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதேபோன்று குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது “மதுரையில் பெரும்பாலான கண்மாய்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“ என்று மனுதாரர் வக்கீல் வாதாடினார். இதையடுத்து, மதுரை திருப்பரங்குன்றம், மேலமடை, தென்கரை, விளாச்சேரி, செல்லூர், அனுப்பானடி உள்ளிட்ட 10 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முடிவில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான செயல்திட்டம் தயாரித்து அதை நிறைவேற்ற கலெக்டர் தலைமையிலான குழு அமைக்க வேண்டும். இந்த செயல்திட்டத்துடன் மதுரை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பொதுப்பணித்துறை சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர் வருகிற 11–ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.