ஒப்பந்த பணியாளர்களுக்கு சேம நல நிதி; திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சேம நல நிதி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் கூறினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தொழிலாளர் சேம நல நிதி செலுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மடீட்சியா அரங்கத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் அனீஷ் சேகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள், கணினி பணியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதி சரியாக சென்று சேரவில்லை என புகார்கள் உள்ளது. அதன் அடிப்படையில் சேம நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதியின் பயன்கள் அனைவருக்கும் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இதன் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்தும், ஒப்பந்தப் பணியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த சிறப்பு விளக்க கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
வருங்காலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் சேம நலநிதி மற்றும் வருங்கால வைப்பு நிதியின் பயன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும். வேலை செய்பவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவது போன்று சலுகையும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இது ஒரு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் வருங்காலங்களில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளருக்கும் சேம நலநிதி மற்றும் வருங்கால வைப்பு நிதியின் பலன்கள் முறையாக சென்றைடய வேண்டும். சேம நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக இருந்தால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்திலும் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.