கோரேகாவில் காங்கிரஸ் பெண் பிரமுகருக்கு கத்திக்குத்து


கோரேகாவில் காங்கிரஸ் பெண் பிரமுகருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Oct 2018 4:07 AM IST (Updated: 6 Oct 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

கோரேகாவில் காங்கிரஸ் பெண் பிரமுகரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை கோரேகாவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மாதவி ரானே. இவர் சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் பாரத் நகர் பகுதியில் தனது மகன் கவுரவுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் 2 பேர் வந்து இறங்கினார்கள். அவர்கள் கையில் கத்தி வைத்திருந்தனர். திடீரென அந்த ஆசாமிகள் இருவரும் மாதவி ரானேயை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக தாயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு மாதவி ரானேவுக்கு 15 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கோரேகாவ் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாதவி ரானே நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருக்கும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு, 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக மாதவி ரானே செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக மாதவி ரானே தாக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

காங்கிரஸ் பெண் பிரமுகரை கத்தியால் குத்திய ஆசாமிகளை அடையாளம் கண்டறிய போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அந்த ஆசாமி இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story