தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்தே அ.தி.மு.க. அரசை கலைக்க வில்லை; மத்திய அரசு மீது சாத்தூர் ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்தே அ.தி.மு.க. அரசை கலைக்காமல் மத்திய அரசு விட்டு வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நேரு மைதானத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். இளைஞரணியைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மணி வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமைக் கழக பேச்சாளர் தாமரை பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:–
கூவத்தூர் ரகசியத்தை வெளியே சொல்லப்போவதாக கூறிய கருணாஸ் எம்.எல்.ஏ.வை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயலலிதா இருந்தபோது அடிமையாக கிடந்த அமைச்சர்கள், இப்போது பிரதமர் மோடிக்கு பயந்து கொண்டு அடிமையாகக் கிடக்கிறார்கள்.
110 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு இந்த ஆட்சி நீடிக்கிறது என்றால் அதற்கு மோடியே காரணம். இவர்கள் செய்யும் ஊழலில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை கலைத்தால் மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடித்துவிடும் என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு பயம். தி.மு.க. என்றைக்கும், யாருக்கும் அடிமையாக இருக்காது.
கொள்ளையடித்து விட்டு சிறைக்கு சென்ற சசிகலாவை தியாக தலைவி என்றும், அதற்கு உறுதுணையாக இருந்த தினகரனை மக்கள் செல்வர் என்றும் போற்றிக் கொள்கின்றனர். ஆனால் தி.மு.க.வில் உள்ள தலைவர்கள் ஒவ்வொரு நாளும் மக்களை பற்றி சந்திக்கக் கூடியவர்கள். தமிழக மக்கள் அ.தி.மு.க. ஆட்சி எப்போது கலையும் என்று எதிர்நோக்கி உள்ளனர். மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைத்து ஸ்டாலின் முதல்–அமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.