இளையான்குடி பகுதி விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்; தி.மு.க. வலியுறுத்தல்
இளையான்குடி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சுப.மதியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளையான்குடி,
இளையான்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான சுப.மதியரசன் தி.மு.க. சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:– இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமத்தில் உள்ள மக்கள் விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
பொதுவாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டமாகவும், வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது. இந்த 2 மாவட்டங்களிலும் வானம் குளிர மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். ஆனால் இதுவரை பயிர் இழப்பீட்டு தொகை பெறுவதற்குரிய அறிவுரைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குஉரிய வங்கிகளுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களுக்கும் வழங்கப்படாததால் இளையான்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் அவதிஅடைந்து வருகின்றனர்.
மேலும் இவ்வாறு இருப்பதால் காலம் தாழ்த்திய பின்னர் அதில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று பல தவறுகள் நடப்பதற்கு அதிகஅளவில் வாய்ப்புகள் உள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் விவசாய வங்கிகளுக்கும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களுக்கும் விவசாயிகளுக்குரிய பயிர்காப்பீட்டு தொகை பெறுவதற்கு உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும்.
இதேபோல் தமிழக அரசின் விலையில்லா ஸ்கூட்டி வாங்கியவர்களுக்கு மானிய தொகை இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பயனாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.