மராட்டியத்தில் டீசல் விலை ரூ.4 குறைப்பு


மராட்டியத்தில் டீசல் விலை ரூ.4 குறைப்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 11:28 PM GMT (Updated: 5 Oct 2018 11:28 PM GMT)

மராட்டியத்தில் பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.4.06 குறைந்தது.

மும்பை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் முதல் தினந்தோறும் ஏறுமுகத்தில் இருந்து வந்தது. மராட்டியம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டி விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தன. ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் மூலமும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 குறைப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.1 வீதம் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 விலை குறைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து உடனடியாக மராட்டிய அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூடுதல் வரியை ரூ.2.50 குறைத்தது. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையால் மராட்டியத்தில் பெட்ரோல் விலை ரூ.5 குறைந்தது.

ஆனால் டீசல் மீதான வரியை மராட்டிய அரசு குறைக்காமல் இருந்தது. இதனால் டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மராட்டியத்தில் டீசல் விலையை ரூ.1.56 குறைப்பதாக நேற்று நாசிக்கில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஏற்கனவே மத்திய அரசு டீசல் விலையை ரூ.2.50 குறைத்த நிலையில், மராட்டியத்தில் டீசல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.4.06 குறைந்தது.

விலை குறைப்பை தொடர்ந்து மும்பையில் நேற்று பெட்ரோல் ரூ.86.97-க்கும், டீசல் ரூ.77.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தினந்தோறும் விலையேற்றத்தால் கலக்கம் அடைந்த வாகன ஓட்டிகளுக்கு விலை குறைப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Next Story