கவர்னர் கிரண்பெடி மீது சட்டப்படி நடவடிக்கை - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி


கவர்னர் கிரண்பெடி மீது சட்டப்படி நடவடிக்கை - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2018 6:00 AM IST (Updated: 6 Oct 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

உரிமை மீறல் புகார் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கவர்னர் கிரண்பெடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்த விழாவின்போது கழிப்பிடங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதியாக அவசர கோலத்தில் அறிவிப்பது ஏன்? என்று நான் கேள்வி எழுப்பினேன். மேலும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாதது குறித்தும் கேட்டேன்.

எனது பேச்சுக்கு விழாவுக்கு வந்திருந்தவர்கள் வரவேற்பு அளித்தனர். ஆனால் அதை பொறுக்க முடியாமல் கவர்னர் கிரண்பெடி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பேசுவதை நிறுத்த சொன்னார். மேலும் மைக் இணைப்பினையும் துண்டிக்க உத்தரவிட்டார். என்னை அரங்கைவிட்டு வெளியே போக சொன்னார். கவர்னரின் நடவடிக்கை குறித்து நான் ராதாகிருஷ்ணன் எம்.பி.யிடம் முறையிட சென்றேன்.

ஆனால் என்னை வழிமறித்த கவர்னர் வெளியே போக சொன்னார். இதைத்தொடர்ந்து நானும் அவரை வெளியே போக சொன்னேன். அப்போது விழா மேடையில் 2 அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் அப்போது அவர்கள் எதையும் கூறவில்லை. அதிகார உச்சகட்டத்தில் நின்று பேசிய கவர்னரை அவர்கள் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.

அதன்பின் சிறிதுநேரம் கழித்து அமைச்சர் நமச்சிவாயம் எழுந்து எனது கையை பிடித்தார். அண்ணன் தம்பி என்ற உரிமையில் அவர் கையை பிடித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதே உரிமையில்தான் அவரது கையை நான் உதறினேன். ஆனால் நான் அங்கிருந்து வந்தபின் அவர் என்னைப்பற்றி தரக் குறைவாக பேசியது தவறு. என்னை கண்டிக்கும் உரிமை அவருக்கு இல்லை.

என்னை கவர்னர் அவமதித்தது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து உரிமை மீறல் புகார் அளித்தேன். அதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் தனது கட்சிக்காரர்களை கொண்டு காவல்துறையினர் முன்னிலையிலேயே எனது உருவபொம்மையை எரித்துள்ளார். நான் தகாத முறையில் நடந்ததாக சித்தரித்து உள்ளனர். நேராக கவர்னரை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் கவர்னருக்கு அமைச்சர் நமச்சிவாயம் வக்காலத்து வாங்கவேண்டிய அவசியம் என்ன?

கவர்னர் தொகுதிக்கு வந்தால் விரட்டி அடியுங்கள் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்கிறார். கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஐகோர்ட்டில் வாதாடுகிறார். ஆனால் இங்குள்ள அமைச்சர் கவர்னருக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து அவமதிக்கும் கவர்னர் கிரண்பெடிக்கு என்னைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது? சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளேன். அதன் மீது அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாவிட்டால் கவர்னர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். அவர் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரிக்கு புகார் அளிப்பேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story