தனியார் காற்றாலை நிறுவனங்கள் விவசாய நிலங்களில் சாலை அமைப்பதால் கடும் பாதிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
வடக்கு இலந்தைகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் விவசாய நிலங்களில் சாலை அமைப்பதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி,
வடக்கு இலந்தைகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் விவசாய நிலங்களில் சாலை அமைப்பதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொர்ணகுமார், மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் புருஷோத்தமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
கடம்பாகுளம் 1800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தை தூர்வார வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடையில் தடுப்பணை அமைக்க வேண்டும். நல்லூர் குளத்தில் பஞ்சாயத்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதற்கு பொதுப்பணித்துறை அனுமதி அளித்து உள்ளதா?. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து காடாக காட்சி அளிக்கிறது. அதனை அகற்ற வேண்டும். தாமிரபரணி ஆற்றில் புதிய தடுப்பணைகள் அமைக்க வேண்டும். உற்பத்தி பொருளுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் விதைகள்
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் உள்ள குளங்கள் நிரம்பாத நிலையில் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. தற்போது மழை பெய்து வருவதால் அனைத்து குளங்களையும் நிரப்ப வேண்டும். அம்பை 16, கர்நாடக பொன்னி ஆகிய நெல் விதைகளை தடை செய்யாமல் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு 20 கிலோ விதை மட்டுமே வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. ஆகையால் கூடுதல் விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி, பிஷப் கால்டுவெல் கல்லூரி ஆகியவற்றில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி ஆதார் அட்டை பெற்று உள்ளனர். அதே போன்று உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கால்வாய்கள் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தூர்வாரப்பட்டு உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நிறுவனம், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதால் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்க வேண்டும். ஆவல்நத்தம் கண்மாய் கரை பலவீனமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். ஆத்தூரான்கால்வாய், ஆத்தூர் குளங்களை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.
காற்றாலை...
இந்த நிலையில் சில விவசாயிகள் திடீரென கூட்ட அரங்கின் முன்பு வந்து எங்களை காப்பாற்றுங்கள், எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியபடி தரையில் படுத்து கலெக்டரை வணங்கினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- வடக்கு இலந்தை குளம் உள்ளிட்ட பல இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் விவசாய நிலங்கள், ஓடைகளில் எந்தவித அனுமதியும் இன்றி சாலை அமைத்தல், மின்கம்பங்களை நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் தனியார் காற்றாலை நிறுவனத்திடம் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
கலெக்டரை முற்றுகை
அதே போன்று மந்திதோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, தனியார் நிலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மீண்டும் அதே இடத்தில் மின்கம்பங்கள் அமைத்தால், போலீஸ் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் இதுகுறித்து உதவி கலெக்டர் உரிய விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார்.
முன்னதாக நேற்று காலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்ததால், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வருவாய் அலுவலர் வீரப்பன் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கலெக்டர் வரும் வரை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story