திருச்செந்தூர் காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் பெண் பிணம் கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை


திருச்செந்தூர் காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் பெண் பிணம் கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2018 3:00 AM IST (Updated: 6 Oct 2018 5:32 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாண நிலையில் பெண் பிணம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்–பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இதன் எதிரில் உள்ள காட்டுப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேலானதால், உடல் அழுகிய நிலையில் இருந்தது.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்–இன்ஸ்பெக்டர் சத்யபாமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த பெண்ணின் உடலின் அருகில் துணிகள் தனியாக தீ வைத்து எரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அந்த பெண் அணிந்து இருந்த செருப்புகளும் தனியாக கிடந்தன.

அங்கு நடப்பட்டு இருந்த எல்லை கல்லின் மீது அந்த பெண் இறந்து கிடந்தார். இறந்த பெண்ணின் உடலை டாக்டர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, மற்றொரு இடத்தில் புதைத்தனர்.

கற்பழித்து கொலையா?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த பெண் யார்?, அவரை மர்மநபர்கள் யாரேனும் கடத்தி வந்து, கற்பழித்து கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாயமான பெண்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். திருச்செந்தூர் காட்டுப்பகுதியில் பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story