கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் மோதல்; 4 பேர் காயம்
வள்ளியூர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
வள்ளியூர்,
வள்ளியூர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பு மனு தாக்கல்நெல்லை மாவட்டம் வள்ளியூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 189 உறுப்பினர்கள் உள்ளனர். 11 பேர் கொண்ட இயக்குனர்களுக்கான தேர்தல் வருகிற 11–ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. 8–ந் தேதி வேட்பு மனு பரிசீலனையும், 9–ந் தேதி வாபஸ் பெறுதலும், 11–ந் தேதி தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அலுவலராக ஜனார்தனம் செயல்பட்டார்.
இந்த நிலையில் ராதாபுரம் யூனியன் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முருகேசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் 300–க்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே சங்கத்திற்கு வந்து மனுதாக்கல் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
இருதரப்பினர் மோதல்அப்போது அங்கு முருகன் தலைமையில் அ.ம.மு.க.வினர் 200–க்கும் மேற்பட்டோர் அங்கு மனுதாக்கல் செய்ய வந்தனர். அப்போது அ.தி.மு.க.வினர், அ.ம.மு.க.வினரை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தாக தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த வள்ளியூர் போலீசார் அங்கு விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டனர். இதில் அ.ம.மு.க.வை சேர்ந்த முருகன், அ.தி.மு.க.வை சேர்ந்த முத்துலிங்கம், வினோஸ்ராஜா, சடையன் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அப்போது அங்கு மழை பெய்ததால் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.
பரபரப்புஇதனால் வேட்பு மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.