மேலப்பாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா ஆய்வு
மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லை,
மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஷில்பா ஆய்வுநெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம், காயிதேமில்லத் தெரு, அம்பை ரோடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று வீடு, வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலப்பாளையம் அம்பை ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலெக்டர் ஷில்பா ஏறி, தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதி பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:–
2 ஆயிரம் பணியாளர்கள்நெல்லை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை நாள்தோறும் அதிகாலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணியில் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.