மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகே புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும் - நாராயணசாமி பேட்டி


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகே புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும் - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2018 11:00 PM GMT (Updated: 6 Oct 2018 7:12 PM GMT)

இன்னும் 4 மாதங்களில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன்பிறகே புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்று தஞ்சையில், நாராயணசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

நான், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தது பிரதமர் என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தப் பகுதியில் 2 மாதத்திற்கு முன்பாக வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டிருந்தேன். அதன்படி அதிகாரிகள் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக நானே இறங்கி வாய்க்காலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன். அதன் விளைவாக 2 மணி நேரத்திற்குள் அந்த வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த காலங்களில் இரண்டு மணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் எல்லாம் தண்ணீர் ஓடும். தற்போது அந்த நிலை மாறி விட்டது. இது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. பா.ஜ.க. தலைவர்கள் குப்பையை கொட்டி தூர்வாருகிறார்கள். அதுபோல் நாங்கள் செய்யவில்லை.

புதுச்சேரியும், புதுடெல்லியும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் ஆகும். இங்கு அரசின் செயல்பாடுகளை அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தான் உத்தரவிட வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் கிடையாது. அரசுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும். மாநில வளர்ச்சிக்கு குந்தகமாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. நாங்கள் அனுப்பும் கோப்புகளை எல்லாம் திருப்பி அனுப்புவது. அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்துவது. மக்களுக்கு நிறைவேற்றுகிற சமூக நலத் திட்டங்களை தடுத்து நிறுத்துவது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய மானியத் தொகையை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட செயலில் துணைநிலை ஆளுனர் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து கூறினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. காரணம், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருப்பது தான்.

மக்களால் ஒரு சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குடியரசுத் தலைவருக்கு கூட எங்களுடைய மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை. ஆனால் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரண் பேடிக்கு எங்கிருந்து இந்த அதிகாரம் வந்தது என்பதுதான் எங்களுடைய கேள்வி.

இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story