மயிலாடுதுறை பகுதியில் 3-வது நாளாக மழை தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம்


மயிலாடுதுறை பகுதியில் 3-வது நாளாக மழை தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:30 AM IST (Updated: 7 Oct 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பகுதியில் 3-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதனால் தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது.

மயிலாடுதுறை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது பரவலாக மழைபெய்து வருகிறது. இந்தநிலையில் அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றெழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனால் நாளை (திங்கட்கிழமை) வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், பொறையாறு, தரங்கம்பாடி, பூம்புகார், திருவெண்காடு, மங்கைமடம், பெருந்தோட்டம், திருக்கடையூர், குத்தாலம், செம்பனார்கோவில், ஆக்கூர், மணல்மேடு, கிழாய், வில்லியநல்லூர், கொள்ளிடம், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய-விடிய பலத்த மழை பெய்தது. நேற்றும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இந்த மழையால் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சரியான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வடியாமல் சாலையிலேயே தேங்கி நின்றது.

கிராமப்புறங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு சம்பா நெற்பயிர்கள் வயலில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேடான பகுதிகளில் இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா பணியை தொடங்கி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மதியம் வரை மயிலாடுதுறையில் 66.5 மி.மீட்டரும், சீர்காழியில் 43 மி.மீட்டரும், கொள்ளிடத்தில் 23 மி.மீட்டரும், மணல்மேட்டில் 35.4 மி.மீட்டரும், தரங்கம்பாடியில் 38 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வீடுகளுக்கு மழை நீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற அவதிப்பட்டனர். சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

Next Story