நார்த்தாம்பூண்டி: பள்ளி அருகில் இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் - மாவட்ட முதன்மை நீதிபதி நடவடிக்கை


நார்த்தாம்பூண்டி: பள்ளி அருகில் இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் - மாவட்ட முதன்மை நீதிபதி நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2018 4:15 AM IST (Updated: 7 Oct 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

நார்த்தாம்பூண்டியில் பள்ளி அருகில் இருந்த டாஸ்மாக் கடை மாவட்ட முதன்மை நீதிபதியின் நடவடிக்கையால் இடமாற்றம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நார்த்தாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாவட்ட முதன்மை நீதிபதி க.மகிழேந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘நாங்கள் படிக்கும் பள்ளியின் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சிலர் மது வாங்கி கொண்டு எங்களுடைய பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் எங்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மேலும் மாணவிகள் நீதிபதியிடம் கூறுகையில், நாங்கள் பள்ளி வரும்போதும், பள்ளியை விட்டு செல்லும் போதும் குடித்துவிட்டு எங்களை கேலி கிண்டல் செய்கின்றனர். அதனால் இங்கிருந்து டாஸ்மாக் கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

இதையடுத்து நீதிபதி மகிழேந்தி அந்த மனுவினை கலெக்டர் கந்தசாமிக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் நார்த்தாம்பூண்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடை, அந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story