கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியை கொன்ற தொழிலாளி கைது


கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியை கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 7 Oct 2018 4:30 AM IST (Updated: 7 Oct 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காவலாளியை கொன்ற தொழிலாளியை 1½ ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 56). இவர் ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவன குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25–ந் தேதி ராமன் குடோன் முன்பு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதில் ராமன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் அவருக்கும் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த எட்டிமடையை சேர்ந்த தொழிலாளி சந்திரன்(40) என்பவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது ராமனை கல்லால் சந்திரன் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள குடோன்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது இது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சந்திரனை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து சந்திரனின் உறவினர்கள் மூலம் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் ராமனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சந்திரன் கோவை ரெயில் நிலையம் வருவதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ரெயிலில் இறங்கிய சந்திரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சந்திரன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

சம்பவத்தன்று நான் மதுகுடிக்க ராமனிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதில் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை அருகில் கிடந்த கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு கர்நாடகாவிற்கு தப்பி சென்றேன். அங்கு கடந்த 1½ ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தேன். தற்போது அங்கு வேலை இல்லாததால் கோவை வந்த போது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான சந்திரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story