தேவாலாவில் மதுக்கடை முன்பு பொதுமக்கள் தர்ணா


தேவாலாவில் மதுக்கடை முன்பு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 7 Oct 2018 3:45 AM IST (Updated: 7 Oct 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

தேவாலாவில் மதுக்கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா பஜாரில் செயல்பட்டு வந்த மதுக்கடை, கடந்த 2017–ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த மதுக்கடையை வேறு இடத்தில் திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே தேவாலாவில் இருந்து அத்திக்குன்னா செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மதுக்கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த பொதுமக்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்டிடத்தின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அந்த மதுக்கடையை அதிகாரிகள் திறக்க போவதாக தகவல் பரவியது. உடனே பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் மதுக்கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் கூடலூர் தாசில்தார் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணியும் அங்கு வந்தார். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நாளை(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இந்த மதுக்கடை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக திராவிடமணி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். பின்னர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story