ராணிப்பேட்டை: பெல் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு


ராணிப்பேட்டை: பெல் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:00 PM GMT (Updated: 6 Oct 2018 9:25 PM GMT)

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள பெல் நிறுவன அதிகாரி வீட்டில் 3 பவுன் நகைகள், ரூ.16 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்,

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் ‘பெல்’ நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கு பெல் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் உள்ளன. மேலும் சமீபத்தில் அங்கு புதிதாக குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்த வளாகத்தில் தங்கி இருக்கும் அதிகாரிகள் ஏராளமானவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளையடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

பெல் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்பவர் காவ்யா (வயது 38), இவர் நேற்று முன் தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியில் சென்றிருந்தார். நள்ளிரவு இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.16 ஆயிரம் மற்றும் 3 பவுன் நகைகளை திருடி உள்ளனர்.

மேலும் அதே குடியிருப்பில் கூடுதல் பொது மேலாளர் பாபு (48), சமீபத்தில் உயிரிழந்த மேற்பார்வையாளர் மோகன் (50), மற்றும் லேப் டெக்னீசியன் அருண்தாஸ் கிறிஸ்டோபர் (55) ஆகியோரின் வீடுகளிலும் மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அங்கு பணம் மற்றும் நகை எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி பெல் வளாக குடியிருப்பில் அடுத்தடுத்து அதிகாரிகள் 6 பேரின் வீடுகளில் 65 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி 2-வது முறையாக 11 அதிகாரிகளின் வீடுகளில் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மேலும் அனில்குமார் என்ற அதிகாரி வீட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் திருட்டு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story