பிற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. முடிவு எடுக்கும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
பிற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. முடிவு எடுக்கும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் காங்கேயம் கோவை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, வி.எஸ்.காளிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்தும், வாக்குச்சாவடி கமிட்டிகள் அமைப்பது தொடர்பாகவும், மாதாந்திர செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் கோபி, தெற்கு மாவட்ட தலைவர் கே.தென்னரசு மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.சரவணன், நகர காங்கிரஸ் தலைவர் சிபகத்துல்லா உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி என்பது இந்திராகாந்தி காலத்திலேயே உருவானது. கலைஞர் காலத்திலும், சோனியாகாந்தி காலத்திலும் கூட்டணி இருந்தது. இப்போது ஸ்டாலின், ராகுல் ஆகியோராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்ப்பது குறித்து தி.மு.க. முடிவு எடுக்கும். எங்களை பொறுத்தவரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியும் சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு.
தமிழகத்தில் அமைச்சர்கள் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தினால் போதாது. சபாநாயகர் தனபால் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். தனபாலை பொறுத்தவரை ஒரு சபாநாயகருக்கு உரிய அடக்கத்தோடு இல்லாமல், அவரும் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டி கொண்டிருக்கிறார். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவருடைய பேட்டியையும் பார்த்தேன். இருவரும் மிகப்பெரிய அப்பாவிகள் போன்று தோன்றுகிறது. ஆனால் உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் பேர் வழிகள் இவர்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை போல, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய பலம் பொருந்திய கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று 40 தொகுதிகளையும் கைப்பற்றும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.