அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைத்து அரசு நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைத்து அரசு நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:15 AM IST (Updated: 7 Oct 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைத்து அரசு நடுநிலை பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் செலவில் ஈரோடு கலைமகள் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அதன்பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கு நூலகத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக முதல்–அமைச்சரிடம் பேசி உள்ளோம். அவர் நல்ல முடிவை எடுப்பார்.

சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தை ஒன்றிணைத்து அரசு நடுநிலை பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ‘மாடல்’ பள்ளிக்கூடம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஈரோடு மாநகர் பகுதியில் ‘மாடல்’ பள்ளிக்கூடம் தொடங்கப்படும். சிறந்த கல்வியை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழகம் அனைத்து துறையிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ‘எழுமோ’ என்று சொல்லப்படுகின்ற புதிய திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக கொண்டு வந்து உள்ளோம். ஜப்பானிய நிறுவனத்தின் மூலமாக 5 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பு தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளோம். வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் விருப்பமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும். இதற்காக சிறந்த ஆடிட்டர்கள் 500 பேர் இலவச பயிற்சியை அளிக்க உள்ளனர்.

ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 57 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் 32 பள்ளிக்கூடங்கள் மாணவ–மாணவிகள் இல்லாமல் செயல்படுகிறது. அங்கு இருபாலர் ஆசிரியர்கள் உள்ளனர். 2 முதல் 10 மாணவ–மாணவிகள் படிக்கும் 1,135 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அங்கும் ஆசிரிய–ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். அந்த பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story