திம்பம் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2-ஆக உயர்வு


திம்பம் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2-ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:15 PM GMT (Updated: 6 Oct 2018 9:56 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.

பஸ்சை சத்தியமங்கலம் கெஞ்சனூரை சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக மைசூர் நஞ்சன்கூடுவை சேர்ந்த ராஜ் (40) என்பவர் இருந்தார். பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட மொத்தம் 26 பேர் இருந்தனர். இந்த பஸ் இரவு 8 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வந்துகொண்டு இருந்தது.

26-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த பாறையில் பஸ் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் பஸ் தலைகீழாக கவிழ்ந்து உருண்டது. அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி ‘அய்யோ அம்மா‘ என்று கூக்குரலிட்டனர்.

சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், வண்டியை நிறுத்தி விபத்து நடந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தார்கள். இரவு நேரம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பயணிகளுக்கு என்ன ஆனது? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விபத்துக்குள்ளான பஸ்சும் தெரியவில்லை. அதனால் அவர்கள் இதுபற்றி உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஆசனூர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் அதிரடிப்படையினரும் அங்கு விரைந்து வந்தார்கள். மேலும் 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படையினரும், அதிரடிப்படையினரும் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி பார்த்தார்கள். அப்போது பெரிய மரத்தில் சிக்கி பஸ் நொறுங்கி கிடந்ததை அவர்கள் கண்டனர். அப்போது பயணிகள் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வெளியே வரமுடியாமல் தவித்தார்கள். ஒரு சிலர் வெளியே வந்து மலைப்பாதை வழியாக மேலே ஏற தொடங்கினர். அதைத்தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 20 பயணிகள் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டார்கள். உடனே படுகாயம் அடைந்த அனைவரும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நொறுங்கிய பஸ்சின் இடிபாடுகளில் சிலர் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த தோல் வியாபாரியான முத்து (65) என்பவரை பிணமாக மீட்டனர். மேலும் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளில் வேறு யாராவது சிக்கி இருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து பஸ்சின் இடிபாடுகளுக்கு இடையே மற்றொருவர் இறந்து கிடந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய உடலையும் மீட்டு மலைப்பகுதியின் மேல் பகுதிக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘இறந்தவர் ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த குருசாமி (55)’ என தெரியவந்தது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்தில் காயம் அடைந்த பஸ் டிரைவர் கவுதம், கண்டக்டர் ராஜ், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர், திண்டலை சேர்ந்த பூர்ணசாமி, அறச்சலூரை சேர்ந்த வடிவேல், பங்களாப்புதூரை சேர்ந்த நாகராஜ், சிவகாமி, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த மோகனசுந்தரம், தாளவாடியை சேர்ந்த பாரதி, ஆனந்தகுமார், நாகேந்திரன், வாணிப்புத்தூரை சேர்ந்த பரமானந்தம், கோபியை சேர்ந்த வர்க்கி, மொடக்குறிச்சியை சேர்ந்த பிரவீன்குமார், ஈரோட்டை சேர்ந்த நாச்சிமுத்து, கோவையை சேர்ந்த கணேசன், வடிவேலு, சாம்ராஜ் நகரை சேர்ந்த நாகேந்திரன், சித்தாயாள், ராமநாதன் ஆகிய 20 பேர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபோக இந்த விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மேலும் 4 பேரில் புளியம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், மாரனூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, தாளவாடியை சேர்ந்த பாரதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story