மாநகராட்சியில் குப்பைகள் பிரச்சினை தீர்க்கப்படும் ஆணையர் ரவிச்சந்திரன் பேச்சு


மாநகராட்சியில் குப்பைகள் பிரச்சினை தீர்க்கப்படும் ஆணையர் ரவிச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2018 4:15 AM IST (Updated: 7 Oct 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சியில் குப்பைகள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி சார்பில் வீடு, நிறுவனங்களில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் கண்காட்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை மத்திய மண்டல தபால் துறை தலைவர் அம்பேஷ் உபமன்யு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-

திருச்சி மாநகராட்சியில் தான் முதன் முதலாக வீடுகளில் குப்பைகளில் இருந்து உரம் மற்றும் பயோகியாஸ் தயாரிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் என 2½ லட்சம் வரி விதிப்புகள் உள்ளன. இதில் அனைவரும் உரம் தயாரிக்க ஆர்வமாக உள்ளனர். மாநகராட்சியில் குப்பைகள் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 450 டன் குப்பைகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதில் 225 டன் குப்பைகளில் இருந்து உரம் மற்றும் கியாஸ் தயாரிக்கப்படுகிறது. வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாடித்தோட்டங்களில் உரங்களை பயன்படுத்தி கொள்ளலாம். பயோ கியாஸ் மூலம் செலவினம் குறையும்.

இந்தியாவிலேயே வீடுகளில் உரம் தயாரிக்கும் முறை திட்டம் அதிகமாக செயல்படுத்தப்படுகிற பெருமையை திருச்சியே பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களுக்கு இந்த திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், குடியிருப்பு நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில் வீடுகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், அரசு குடியிருப்பு பகுதிகளில் தினசரி உருவாகும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க தேவையான உபகரணங்கள், மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கான முறைகள் குறித்து 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. முன்னதாக தொடக்க விழாவில் மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியை ஸ்ரீநிதி, அதிகாரிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story