சதுரகிரி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு; ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


சதுரகிரி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு; ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:04 AM IST (Updated: 7 Oct 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

கனமழை பெய்யக்கூடும் என்ற காரணத்தினால் சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு நிலையில் நேற்று அங்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வத்திராயிருப்பு,

கனமழை பெய்யும் என்ற காரணத்தினால் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்தநிலையில் நாளை(திங்கட்கிழமை) புரட்டாசி அமாவாசை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை 5 மணிக்கே சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்காக தாணிப்பாறை கேட் முன்பு குவிந்தனர்.

தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி வனத்துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு அமர்ந்து பஜனை பாடல்களை பாடினர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் பஜனை பாடல்களை பாடிய வண்ணம் அங்கேயே அமர்ந்திருந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் அபாயம் உள்ளதால் பக்தர்களை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் உறுதியாக கூறினர். இதனையடுத்து அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story