ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக தினகரன் சொல்வது அனைத்தும் பொய் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக டி.டி.வி.தினகரன் சொல்வது அனைத்தும் பொய் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள சிலைமான், புளியங்குளம், விரகனூர், பனையூர், விராதனூர், நல்லூர், குசவன்குண்டு உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பேருக்கு ரூ.65 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரியபுள்ளான், அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகிகள் தமிழரசன், அய்யப்பன், வெற்றிவேல், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கனமழை பெய்யும் என்பதால் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 7 பேரிடர் மீட்பு கம்பெனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு கம்பெனிகள் மதுரை, கோவை என 5 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு அந்த பேரிடர் மீட்பு கம்பெனிகள் நேற்று காலை வந்துவிட்டது. தினகரன் பேச்சு அவரது இயலாமையை காட்டுகிறது. மக்களை சந்தித்து வாக்குகளை கேட்பதை விட்டுவிட்டு என்னை சந்தித்தவர்கள் யார் என்பது பற்றி வெளியிடுவதாக அறிவிப்பது, அவர் அரசியலை தாண்டி தரம் தாழ்ந்து போய்விட்டார் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக டி.டி.வி.தினகரன் சொல்வது அனைத்தும் பொய். முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எங்களுக்கு மக்களிடத்தில் கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல் உளறி கொண்டு உள்ளார். தினகரன் நோக்கம் கட்சிக்கோ மக்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்பது கிடையாது. அவர் மட்டும் அதிகாரம் பெறவேண்டும் என்ற வெறியின் காரணமாக, அதிகார பசியின் காரணமாக இருக்கக்கூடிய அனைவர் மீதும் குற்றம் சொல்லி வருகிறார். ஓ.பி.எஸ் இந்த ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றவே சந்தித்ததாக விளக்கமளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.