ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை வி‌ஷம் கொடுத்து கொன்ற பெற்றோர்; தாயாரும் கைதாகிறார்


ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை வி‌ஷம் கொடுத்து கொன்ற பெற்றோர்; தாயாரும் கைதாகிறார்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:45 AM IST (Updated: 7 Oct 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவளர்ச்சி குன்றிய 9 வயது மகளுக்கு பெற்றோர் வி‌ஷம் கொடுத்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி நேற்று இறந்தாள். இதனையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைக்குளத் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்(வயது 44). என்ஜினீயர். இவரது மனைவி ரேவதி(40). இவரும் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சாதனா(9). மனவளர்ச்சி குன்றிய சாதனாவால் எழுந்திருக்கவோ, ஏனைய எந்த ஒரு உடல் இயக்க செயல்பாடுகளை செய்யவோ இயலாது. சாதனாவை பல மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் மகள் படும் துயரத்தை கண்டு முனீஸ்வரன்–ரேவதி தம்பதியினர் விரக்தியில் இருந்தனர். இதையடுத்து அவர்கள் மகளை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி கடந்த 1–ந்தேதி இரவு சாதனாவை நாகபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலான காத்தப்பசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமி கும்பிட்ட பின்னர், 2 பேரும் மனதை கல்லாக்கி கொண்டு தாங்கள் வாங்கி வைத்திருந்த வி‌ஷத்தை சாதனாவை மடியில் வைத்து கொடுத்தனர். இதனால் சாதனா சிறிது நேரத்தில் மயங்கி விட்டாள்.

இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தாள். இதுகுறித்து மல்லி கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சாதனா நேற்று இறந்தார். இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுமின் தாயார் ரேவதியும் இந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story