மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 93 மில்லி மீட்டர் பதிவு


மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 93 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 7 Oct 2018 4:28 AM IST (Updated: 7 Oct 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 93 மில்லி மீட்டர் பதிவானது.

கடலூர்,

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 93 மில்லி மீட்டர் பதிவானது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பரவலாக நல்ல மழை பெய்தது.

இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கி நின்றதை பார்க்க முடிகிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்து உள்ளாட்சித்துறை பணியாளர்கள் விரைந்து சென்று குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நின்ற வெள்ளத்தை வடியவைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மழைகாரணமாக கடலூர் மீனவர்கள் 2-வது நாளாகவும், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதி மீனவர்கள் 3-வது நாளாகவும் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடலூர் துறைமுகத்திலும், அன்னங்கோவில் கரையோர பகுதியிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் நேற்று அதிகாலை மழை லேசாக தூறியது. அதன் பின்னர் வானத்தின் கருமேகங்கள் திரண்டு இருள்சூழ்ந்து காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. காலை 10 மணிக்கு பிறகு வெயில் சுள்ளென சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீர் வடிய தொடங்கியது.

மழைக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடந்தவர்கள் வெளியே வந்து சென்றனர். சாலையோர சிறு வியாபாரிகளும் நகரின் முக்கிய வீதிகளில் கடை அமைத்து வியாபாரம் செய்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி கீதா(வயது 28). இவர் நேற்று தனது தொகுப்பு வீட்டில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தபோது மழையின் காரணமாக திடீரென வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை பெயர்ந்து கீதா மீது விழுந்ததில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ராமநத்தம் அருகே உள்ள அரங்கூர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படாததால், கடந்த 2 நாட்களாக பெய்த மழை தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் ஆத்திரமடைந்த காலனி மக்கள் நேற்று காலையில் ஒன்று திரண்டு, தெருக்களில் தேங்கி நின்ற மழைநீரில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திதரக்கோரி கோஷமிட்டனர். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 93 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக லக்கூரில் 18.20 மில்லி மீட்டரும் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 38.95 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மீட்பு பணிக்காக 4 பைபர் படகுகள் அனுப்பி வைப்பு

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை சமாளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம், திருநாரையூர், சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமம், குறிஞ்சிப்பாடி தாலுகா கல்குணம் ஆகிய 4 கிராமங்களுக்கு மீன்வளத்துறை சார்பில் கடலூர் துறைமுகத்தில் இருந்து 4 பைபர் படகுகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை பார்வையிட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் கூறுகையில், இந்த பைபர் படகுகள் வெள்ள பாதிப்பு உள்ள பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். ஒவ்வொரு படகிலும் 4 மீனவர்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருப்பார்கள் என்றார்.

மழைநீர் ஒழுகும் காவல் கட்டுப்பாட்டு அறை

கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் உள்ளது. மிகவும் பழமையான இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் கடலூர் உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இந்த கட்டுப்பாட்டு அறையில் மழைநீர் ஒழுகி, அறை முழுவதும் மழைநீர் தேங்கியது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையிலும், பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் இந்த கட்டுப்பாட்டு அறை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக எப்போது என்னவாகுமோ என்ற அச்சத்துடன் அங்கு போலீசார் பணிபுரிகிறார்கள். எனவே பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் உட்கோட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மாவட்டத்தில் வறண்டு கிடந்த ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பொதுப்பணித்துறை(நீர்வளம்) விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்தின் கீழ் மொத்தம் 210 சிறு ஏரிகள் உள்ளன. இதில் 5 ஏரிகள் 75 சதவீதம் வரையிலும், 4 ஏரிகள் 50 முதல் 75 சதவீதத்துக்குள்ளாகவும், 3 ஏரிகள் 25 முதல் 50 சதவீதத்துக்குள்ளாகவும், 198 ஏரிகள் 25 சதவீததத்துக்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளன.

அதேபோல் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்டத்தின் கீழ் 18 ஏரிகள் உள்ளன. இதில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மேலும் 11 ஏரிகள் 75 சதவீதம் வரையிலும், 4 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் வரையிலும் தண்ணீர் காணப்படுகிறது.

மேல்பட்டாம்பாக்கம் குளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றம்

நெல்லிக்குப்பம் பகுதியில் பெய்த மழையால் மேல்பட்டாம்பாக்கத்தில் குடியிருப்புகளுக்கு நடுவில் உள்ள கரையான்குளத்துக்கு தண்ணீர் அதிகளவு வந்தது. இதனால் அந்த குளம் நிரம்பி, அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று குளத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து கரையான்குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் தெருக்களில் தேங்கி இருந்த மழைநீரும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.



Next Story