ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது; விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த ஓட்டல் ஊழியர்கள்


ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது; விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த ஓட்டல் ஊழியர்கள்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:45 AM IST (Updated: 7 Oct 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் தைக்காப்பட்டி தெருவை சேர்ந்தவர் பாலு. நகைக்கடை உரிமையாளர். இவரது மகன் முத்துகார்த்திக்(வயது 19). இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வைத்திலிங்காபுரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(66). மில்லில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை முடித்து ஸ்ரீவில்லிபுத்தூர்–ராஜபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் இவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்திலிங்காபுரம் காட்டுத்தெருவை சேர்ந்தவர் இருளப்பன்(37). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவரை வழிமறித்து செல்போன், ரூ.230–ஐ பறித்தனர். மேலும் இவரை சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்தக்காயத்துடன் தனது ஊருக்குச் செல்வதற்காக இருளப்பன் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் இருந்த ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ரத்தக்காயத்துடன் இருளப்பன் வருவதை பார்த்து அவரிடம் விசாரித்துள்ளனர். அவர்களிடம் இருளப்பன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனே ஓட்டல் ஊழியர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் சாலையில் வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்றனர்.

எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கு அருகே கொள்ளையர்களை அவர்கள் விரட்டி பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பியோடி விட்டார். மற்ற 3 கொள்ளையர்களை மடக்கி பிடித்த சம்பவம் குறித்து போலீசாருக்கு ஓட்டல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார், கொள்ளையர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மம்சாபுரம் சிப்பந்தி காலனியை சேர்ந்த முத்துக்குமார்(19), திண்டுக்கல் கிழக்கு கோவிந்தபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(20), திண்டுக்கல்–பழனி சாலையை சேர்ந்த பிரவின்(21) என்பதும், தப்பியோடியவர் திண்டுக்கல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த விஜய்(19) எனவும் தெரியவந்தது.

இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும், பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் திருடிய மோட்டார் சைக்கிள், செல்போன்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story